பச்சைமரங்கள் படருங்கொடிகள் இச்சைக்கிளிகள் இசைக்கும்குயில்கள்
அச்சமில்லாச் சிங்கம்புலிகள் அஞ்சியோடிடும் முயல்கள்மான்கள்
மிச்சமுள்ள ஊர்வனநடப்பன கொஞ்சிக்களித்துக் கூடியேவாழும்
தச்சன்செய்யாப் பதுமைதானோ? தருமம்தழைக்கும் தாயெனும்பூமி!
ஆற்றங்கரையும் அடர்ந்தகாடும் நாற்றங்காலும் நஞ்சைபுஞ்சையும்
காற்றும்புயலும் கனமழைப்பெருக்கும் தோற்றப்பிழையும் துயரும்வறுமையும்
கோட்டைஅரண்மனை கொத்தளக்கூடம் வாட்டும்யுத்தம் வழியும்இரத்தம்
வேட்கைச்சுதந்திரம் விளையும்சாதனைக் காட்சிகள்காட்டும் களமேபூமி!
கயல்வாழ்கடல்கள் கலக்கும்பூகம்பம் உயரியமலைகள் உதிர்ந்திடுமுயிர்கள்
நயவஞ்சகர்கள் நல்லவர்வல்லவர் நாட்டைக்காத்திடும் இராணுவவீரர்
இயல்பாய்வாழப் புகலிடம்தந்து இயற்கைச்சீற்றம் எதையும்தாங்கிச்
சுயமாய்ச்சூரிய தேவனைச்சுற்றிச் சுழன்றேகாத்திடும் சுந்தரபூமி!
பரந்துவிளங்கும் பாலைநிலமாய்ச் சுரக்கும்சுனைநீர் பெருக்கும்சுரபியாய்
விரிந்தகாடாய் வியத்தகுவனமாய் அருவியாய்அலைபுரள் கடலின்கரையாய்க்
கரிசல்மண்ணாய்க் கல்லுடைக்குன்றாய் கனிமம்புதைந்த கருவூலமாய்
நிறைந்தநிதியாய் நிலைத்திடும்புகழாய் நேசம்காட்டும் நற்றாய்பூமி!
சுவர்க்கமென்பது தாயின்காலடி! சுழலும்பூமியோ சுமக்கும்பொன்மடி!
எவர்க்கும்வேண்டும் இன்பம்நல்கி இசைந்துவாழச் செய்திடும்பூமி!
சுற்றம்சூழல் சுத்தம்செய்து மரங்களைப்போற்றி மண்வளம்காப்போம்!
நற்றவவானிலும் நனிசிறந்திட்ட பூமித்தாயை நன்றியால்வணங்குவோம்!!