அந்த அவள் ….
************************************
செந்தா மரைமுகமோ! சிரித்திடும் தேன்மலரோ !
தந்தங்கள் அவயவமோ! தளிர்மேனி சந்தனமோ!
கண்கள் கயல்மீனோ! கடல்நீலம் கொண்டதுவோ!
அந்திவரும் சந்திரனோ! அந்தஅவள் தான்யாரோ?
ஊர்வியக்கும் மோகினியோ! உயர்மாடப் பைங்கிளியோ!
ஊர்ந்துவரும் தேரழகோ! உற்சவத்துத் தேவதையோ!
கார்கூந்தல் கருமுகிலோ! காந்தள்மலர் கைவிரலோ!
வார்த்திட்ட பொற்சிலையோ! வந்துநின்ற அவள்யாரோ?
என்னுள்ளம் புகுந்தவளோ! இதயத்தைக் கவர்ந்தவளோ!
எந்தனுயிர்க் காதலியாய் இன்பமெலாம் தந்தவளோ!
சொந்தமெனச் சொன்னவளோ! சுகதுக்கம் பகிர்ந்தவளோ!
சிந்தையிலே நிறைந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ?
ஊண்தந்த உத்தமியோ! உயர்ந்தகுணம் கொண்டவளோ!
அன்பென்னும் பெருஞ்சுனையோ! அரம்பையோ! ஆரணங்கோ!
துன்பங்கள் துடைத்தவளோ! தூயமனம் கொண்டவளோ!
என்னுள்ளே கலந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ?
தந்தைசொல் மந்திரமோ! தமக்கையின் திருமணமோ!
இன்னபிற காரணமோ! ஏனிந்த நாடகமோ!
விதிவழியே சென்றாளோ! விடுதியிலே கிடந்தாளோ!
புதியகதை படைத்தாளோ! அந்தஅவள் தான்யாரோ?
அந்தஅவள் எனையாளப் புதுப்பிறவி எடுக்கட்டும்!
அந்தஅவள் வருகையிலே என்வாழ்வு மலரட்டும்!
அந்தஅவள் அகலிகையாய்க் காவியங்கள் எழுதட்டும்!
அந்தஅவள் செந்தமிழின் கவிமணமாய் விளங்கட்டும்!
************
பானுரவி