பொருள் பொதிந்த புறநானூறு
தமிழனென்று சொல்லி இத்தரணியில் தலை நிமிர்ந்து நின்று, கடந்து வந்த பாதையைக் கண்ணுறுங்கால், கன்னல் தமிழ்க் கடலுள் மூழ்கி முத்தென்றும், மணியென்றும், மின்னுகின்ற வைரமென்றும் நமது முன்னோர்கள் படைத்திட்ட இலக்கியத்தை, இயல்கொண்ட தமிழ் நயத்தை, இன்பத்தமிழ்க் காவியத்தைப், பசுமரத்தணியாக என்னுள் இழைத்துச் செதுக்கி வைத்த எந்தையும் தாயும் நிழலுருவாக நினைவென்ற பனிப்படலத்தில் தெரிகின்றனர். ஆங்கே திங்களோடும், செம்பரிதிச் சுடரோடும், விண்ணோடும், முகிலோடும் மண்ணோடும், மயக்குகின்ற இயற்கையோடும், என்றும் இளமையாய் வளர்கின்ற தமிழை ஓதிவைத்த ஆசானையும் மறவாமல் எனது எண்ணத்தில் ஏற்றி, சீர் மிகுந்த சிந்தனையால் பணிவுடன் வந்திக்கிறேன்…..
“கனியிடை ஏறிய சுவையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிடும் செவ்விள நீரும்
இனியன என்பேன் எனினும்-தமிழே
என்னுயிர் என்பேன் கண்டீர்!”
கரும்பில் அடியென்ன, நுனியென்ன….எல்லாப் பகுதியுமே இனிக்குமே! அவ்வாறே நம் செந்தமிழும் சுவையூறும் சுனையன்றோ? பாலொடு தேனும் பழச்சுவையும் போன்றினிமை சாலச் சிறந்த தமிழல்லவா?
நீலவான் நித்திலப் பூம்பந்தலிலே கோல ஒளி கூட்டிக் கோத்திலங்கும் மின்னொளி போல், தோன்றாத் தோன்றித் துறை பல முடித்த ஆன்றவிந்த தமிழறிஞர்கள் ஆக்கிவைத்த தமிழ் இலக்கியங்கள்தான் எத்தனை, எத்தனை! கள்ளூறும் கம்பனின் இராமயணமும், சிந்தைக்கினிய சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஜீவக சிந்தாமணியும், இருவரிக்குறளும், இலக்கியக்சுவை மிக்க தொல்காப்பிய நூல்களும், நம் உள்ளத்து இருளகற்றி, எண்ணத்தில் விளக்கேற்றும் சுடர்மணித் தீபங்களாக அல்லவா விளங்குகின்றன?
இந்தச் சொற்களஞ்சியத்தில் எதைச் சொல்வது, எதை விடுவது? பாயும் கங்கையைச் சிறு சொம்பில் அடைத்தல் நியாயமா? பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் படைத்திட்ட உயிர்கள் அனைத்திற்கும் அகமும் புறமும் ஏற்புடைய இரண்டு கட்டாய நிலைப்பாடாக அமைந்துள்ளது. இருளுக்கு ஒளியும், நிஜத்திற்கு நிழலும், நமக்கு நிதரிசனமாகத் தெரிவதால் அகமும் புறமும் கொண்ட வாழ்க்கை, உலகின் எல்லா வகை உயிரினத்துக்கும் பொதுவானது என்பதும் புலனாகிறது. ஆதலினால் இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகி வாழும் வழி முறைகளை முறைமையுடன் வெள்ளிடை மலையாகக் காட்டுகின்ற பொதினமாகிய புற நானூறு பற்றி அறிந்து கொள்வது சாலச் சிறந்தது அல்லவா?
துள்ளும் கோடி நினைவுகளைத், தூய அறிவு முதிர்ச்சியினை உள்ளம் உணர்த்தும் கருப் பொருளை, உலகம் காட்டும் அனுபவத்தை, ஊன்றிக் கற்போர் உவகையினால், உளமும் உயிரும் உயர்ந்திடவே, அள்ளிக் கொள்ளும் இலக்கியமாய்ப் புற நானூறு திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. நமது அறிவைப் பெருக்கிச் சிந்தனையைத் திறந்து, உண்மையை உருக்கத்தை, குணத்தை, நடத்தையை, சிறப்பை, ஈகையை பெருந்தன்மையை, வாரி வழங்கும் கொடைத்தன்மையை…… இன்னும் பல குணாதிசயங்களை, தமிழ் மொழியை விரித்துப் பலவிதமாய் விளக்கி, யாவரும் எக்காலத்தும் பயனுறும் விதமாய்ப் புலவர்களும், புரவலர்களும் செப்பிய திருவாய்மொழியே புற நானூறு ஆகும்.
காலமறியாது சுழன்று கொண்டிருக்கும் உலகத்தில் தோன்றிய அனைத்து இலக்கியங்களுள், நம் தமிழ் இலக்கியம் தொன்மையானது மட்டுமின்றி முதன்மையானதும் ஆகும்.
அவற்றுள் சங்க காலத்து இலக்கியங்கள் நானூற்று எழுபத்துமூன்று (473) புலவர்களால் எழுதப்பெற்ற ஈராயிரத்து முன்னூற்று எண்பத்து ஒன்று (2381) பாடல்களைக் கொண்டவை. இப்புலவர் பெருமக்களுள், தமிழ் அறிஞர்களும், புலவர்களும், மன்னர்களும் வள்ளல்களும், பெண்டிரும் அடங்குவர்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல் என்று பாகுபடுத்தப்பட்ட சங்க கால இலக்கியங்களுள், புற நானூறு தனித்தன்மை கொண்டதாக விளங்குகிறது.
“நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த
பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென
இத்திறத் தெட்டுத் தொகை’
இதில் புற நானூறு என்பது பண்டைத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டங்களையும், சவால்களையும், தன்மான உணர்வுடன் அற நெறியோடும் கடமை உணர்வோடும், நாட்டுப் பற்றொடும் தமக்கென வாழாப் பிறர்க்குறியாளராகத் திகழ்ந்த காலத்தைத் தெற்றென விளக்குகிறது. மேலும், மொழியும் இனமும் இணைந்த ஒரு பரிணாமத்தையும், காலத்திரையில் முகம்பதித்த தமிழர்களின் அறத்தையும், மறத்தையும், தமிழன் விழுந்ததையும், வீறு கொண்டு எழுந்ததையும், புகழோடு ஈதல் இசைபட வாழ்ந்ததையும், புற நானூற்றுப்பாடல்களில் எழுச்சியுடன் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்குப் புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்ற வெவ்வேறு பெயர்களும் உண்டு.
புற நானூற்றுப் பாடல்களின் காலம் கி.மு.1000 முதல் கி.பி.300 வரையில் என்று கணக்கிடப்படுகிறது. மாகாபாரதம் பற்றியும், இராமாயணம் பற்றியும், புற நானூற்றில் காணப்பெறுகிறது.
பாரதப் போர் நடந்த காலத்தே உதியன் சேரலாதன் என்ற மன்னன், பாரதப் போர் வீர்ர்களுக்குப் பெருஞ்சோறு தந்தானென்று ஒரு பாடல்குறிப்பிடுகிறது. இத்தகைய சரித்திரச் சான்றுகளால், புற நானூறு மிகவும் பழமை வாய்ந்தது என்பது புலனாகிறது.
இந்தப் புற நானூற்றுப் பாடல்கள் தொல்காப்பியத்தில் காணப் பெறும் திணையையும், துறையையும் சார்ந்து புனையப்பெற்றவையாகும். துறை எனப்படுவது, உயிரைப், பொருளை, மனிதரை, பறவைகளை மிருகங்களை, மையப்படுத்தியும், திணை என்பதுஅவை சார்ந்த சூழல், மற்றும் குண நலங்களைப் பொறுத்தும் விவரிக்கப்படுபவை.
மன்னவர்கள் தமிழறிஞர்களையும், புலவர்களையும் மிகுந்த மரியாதையுடன் நடத்தியதோடு, அவர்கள் கூறிய அறிவுரைகளையும் செவிமடுத்தனர். மகிழ்வின் வெளிப்பாடாய் அவர்களுக்குப் பரிசில்கள் தந்தனர்.
“இலையென்ற புலவர்க்கோ
எடையின்றிப் பொன்னீந்தார் வேந்தர்
கலைதந்தார் நமக்கெல்லாம் ஆகையினால்
தலை நிமிர்ந்து தமிழாலே உயர்ந்தோம்!”
என்ற பாரதிதாசனாரின் கூற்று, புறநானூற்றுக் காலத்து மன்னர்களின் தரும நெறியினைப் பறைசாற்றுகிறது.
காரிகிழார் என்ற புலவர் பாண்டிய மன்னனின் மாண்பினை இயற்கையைப் போன்றது எனப் பாடுகிறார். இயற்கை என்பது எல்லையற்றது. மன்னனின் பரந்த மனத்தை இயற்கையோடு புலவர் ஒப்பிடுவது, புலவரின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.
…..வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரையொடு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெற்றிய குடக்கும்
தண்ட ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதி மதியம் போலும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!
எத்தனை அழகாக வாழ்த்துகிறார்! சங்ககாலப் பெண் புலவருள் தலைசிறந்த ஒளவையாரின் படைப்பான மற்றொரு பாடலில் மழலையின் பெருமை புலப்படுகிறது.
“யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந்தனவால்—புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன—ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே!
வாழ்வின் நிறைவுக்கு மக்கட்செல்வம் மிக இன்றியமையாதது என்பதை மேற்கூறிய பாடல் விளக்குகிறது. செல்வத்து பயனே ஈதல் என்பதும் வீடும் நாடும் இனியதெனில் வாழும் வாழ்வும் இனியதே என்று உணர்த்தும் புறநானூற்றுப் பாடல்கள் அனேகம்!
நடு நிலைமையைப் போற்றிய காலத்தில் விளைந்த புற நானூற்றுப் பாடல்கள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகும். தனது தமையனைக் கொல்ல நினைத்த இளங்குமணனைத் தனது உரையால் மனமாற்றம் செய்த பிசிராந்தையார், அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றது, மக்களுக்கு விதிக்கப்பட்ட நில வரியை வெள்ளைக்குடி நாயனார் என்பவர் கிள்ளிவளவனிடம் அறிவுறுத்தி அவ்வரியை நீக்கியது போன்ற நிகழ்வுகள், நீதி வழுவா நெறிமுறையில் பண்டைய காலத்து அரசர்கள் ஆண்டு வந்ததைக் கட்டியம் கூறுகின்றன.
நற்றிணையும், நன்னூலும், இருவரிக் குறளும், அறநெறிச் சாரமும் ஆசாரக் கோவையும், நான்மணிக்கடிகையும், கொன்றை வேந்தனும் கலித்தொகையும், புறப்பொருள் வெண்பா மாலையும் சொல்லுகின்ற நீதியை, பொருளை, ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேடனாலும் கூற இயலாது எனும்போது, நாம் மட்டும் எம்மாத்திரம்? கபிலர், பாரி,
கடலுள் மாய்ந்த பெருவழுதி, பெருந்தலைச் சாத்தனார், சீத்தலைச் சாத்தனார், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, அதியமான்………எழுதுகோலுக்கு அடங்காப் பெருமக்கள் இன்னும் பலர் பாடிவைத்த புற நானூற்றுப் பாடல்களில் அக்கால வரலாறும், பண்பாட்டுக் கூறுகளும் நிரம்பிக் கிடக்கின்றன.
‘இவண் இசை உடையோர்க்கு அல்லது அவனது
உயர் நிலை உலகத்தே உறையுள் இன்மை’—
அதாவது, நல்ல பல செயல்களினால் புகழ் பெற்றோரே தேவருலகத்துச் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்த்தால், அக்காலத் தமிழர்கள் அறம் பிறழாது வாழ்ந்தார்களென்று அறிகிறோம். மேலும், சங்க காலத் தமிழர்கள், வாழ்க்கையை அறியும் திறனுடன் நோக்கினர்.
நிலைப்பதும், நிலையாததும், எதுவெனத் தெளிந்தனர். உடல், செல்வம், இளமை போன்றவை நிரந்தனமானவை அல்ல என்றும், கொடை, நன்மை செய்தல், தீங்கிழையாமை, தவற்றுக்குத் தண்டனை தராமல் மன்னித்துத் திருத்துதல் போன்றவைகளே என்றும் நிலையா பேறு தரும் என்பதை உணர்ந்து வாழ்ந்தனர்.
‘எவ்வழி நல்லவர் ஆடவராயின், அவ்வழி நல்லன வாழிய நிலனே!’
ஒரு நாட்டின் சிறப்பும், பெருமையும் அன்னாட்டு மாந்தரின் பொறுப்புணர்ச்சியில் அடங்கியுள்ளது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஒளவை! அறனெனப்படுவதே இல்வாழ்க்கை அல்லவா?
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவதும் அன்றே வாழ்தல்!
……… ………….
நீர்வழிப் படூம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூம்என்பது திறவோர்!
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலில் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக்க் காண வேண்டும் என்கிற தொலை நோக்கு தெரிகிறது. அன்றே அவர் பாடி வைத்தபடியே இன்றைக்கு அனைத்தும் உலகமயம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது வெள்ளிடைமலை!
ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியமும், அச்சங்க காலத்துப் புற நானூறும், நல்கரிய நன்மையெல்லாம் நம் தமிழருக்குத் தருவதால் தெள்ளிய சிந்தையுடன் புறநானூற்றைப் புறம் தள்ளாமல், பெருமையுடன் அள்ளிக் கொள்ளுவோம். ஆக்கம் பெறுவோம்!
“ஈன்று புறம் தருதல் தாயின் கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடனே
ஒன்றும்வாள் அருஞ்சமம் முறுக்கிக்
கன்றெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
புற நானூற்றுக் கவிஞர் பொன்முடியார் ஒவ்வொருவரது கடமையையும் வரையறுத்துக் கூறும் போது, நம் கடமை என்பது யாதென நினைக்கும்போது கவிஞர் கண்ணதாசன் கூறியது மின்னலைப் போல் தோன்றுகிறது.
‘உடலுக்குப் பொருள்தேடி உள்ளத்தில் இறை நாடித்
தமிழுக்குப் பணி செய்தே கிடப்போம்”
கற்றோருக்கழகு கற்றுணர்ந்து அடங்குவதோடு, கற்றவழி நடப்பதும் ஆகும். வள்ளுவரின் ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதற்கேற்பத் தமிழின் இலக்கியங்களைக் கற்போம். அதன் வழி நடப்போம்.
மகா கவி பாரதியும் ‘இருந் தமிழே உன்னால் இருந்தேன் வானோர் சிறந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்கிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழைப் போற்றுவோம்!
உயர்த்துவோம்.! புறநானூற்றின் பொருளுணர்ந்து அதன் வழி நடந்து பெரு வாழ்வு வாழ்வோம்! ஏகும் நாடு எதுவானாலும் தேக்கமின்றித் தமிழை வாழ்த்துவோம்!
கட்டுரை ஆக்கம்:
பானுமதி வெங்கட்ரமணி
1