விதைகள்

விதைகள்

டேபிள் விரிப்பைச் சரி செய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பி, கோப்பைகள், தட்டுக்கள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா.  இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டிப் பார்ட்டி.  துளசியின் திருமணம், அதை ஒட்டிய இந்தியப் பயணம் என்று நாட்கள் போனதில், இன்று தான் நேரம் கிடைத்துத் தோழிகளை அழைத்திருந்தாள்.  வருபவர்கள் எல்லோரும் லேடீஸ் என்பதால், அவள் கணவன் அருணும் தனது நண்பர்களோடு டென்னிஸ் விளையாடப் போய் விட்டான்.

பூரி, மட்டர்பனீர், உருளை கட்லட், அவல் கேசரி, தயிர் வடை,என்று எல்லா அயிட்டங்களும் அணிவகுத்திருந்தன.  கூடவே ஐஸ் மிதக்கும் எலுமிச்சை நன்னாரி சர்பத்தும், கிரீன் டீயும், உலர்பழக் கலவைகள் கொண்ட ப்ரூட் சாலட்டும்.

கலிபோர்னியாவின், மவுண்டன்வியூவிற்கு வந்ததிலிருந்து இந்தக் கிட்டிப் பார்ட்டி பதினைந்தில் ஆரம்பித்து, இப்போது இருபத்தைந்தில் வந்து நிற்கிறது.  ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று யாரேனும் ஒருவர் வீட்டில் இப்படிக் கூடுவது வழக்கமான ஒன்றாகிப் போனது. உதவிக் கரங்கள் நீட்டவும், ஒருவருக்கொருவர் உருப்படியான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், இந்தக் கிட்டிப் பார்ட்டி நடந்து வந்தது என்றாலும், அவ்வப்போது நாட்டு நடப்பும், ஊர் வம்பும், பிறர் வீட்டுச் சமாச்சாரங்களை அளக்கும் வம்புமடமாகவும் அது இருந்தது.  அதிலும், கல்பனாவும், காயத்ரியும் பேசும் விஷயங்கள் அனைத்துமே கையும் காலும் முளைத்த கதையாகத் தானிருக்கும்.  இரண்டை நாலாக்கி, நாலை எட்டாக்கிப் பேசுவதில் மகா கெட்டிக்காரர்கள்.

நாடு விட்டு நாடு வந்து இப்படி வாழும்போது, நண்பர்கள் மிகவும் அத்தியாவசியமென்று உணர்ந்த படியால், மேகலாவும் தனது இயல்புக்கு மாறான இந்தப் பெண்களுடன் சிநேகமாக இருந்து வந்தாள்.

நினைத்தும் பார்க்கவில்லை.  மவுண்டன்வியூவிற்கு வந்து இருபத்துமூன்று வருஷங்கள் விளையாட்டுப் போல் ஓடிவிட்டன.  எல்லாம் நேற்று நடந்தாற் போல் அல்லவா இருக்கிறது….மேகலாவின் எண்ணப்பறவை சிறகடித்துப் பறந்து நினைவுகளை அசை போட்டது.

ஒரு டிகிரி வாங்கிய கையோடு குறுக்கெழுத்தும் தட்டச்சும் பாஸ் பண்ணி ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்துப் போய் வந்து கொண்டிருந்த நாட்கள் நிழலாடின.  கிராமமாகப் போய்விட்டபடியால், மேல்தட்டு மக்களின் ஆடம்பரத்தனமும், நாகரீகப் போக்கும், இன்றைய காலம் போல் தகவல் தொழில் நுட்ப சாதனங்களும் புகுந்து கலப்படம் செய்யாத அழகான நாட்கள் அவை…

மேகலா வேலை செய்து வந்த கம்பெனிக்கு ஆடிட்டிங் செய்ய வந்த அருணுக்கு அவளை நிரம்பவே பிடித்துப் போனது.  அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அமெரிக்கையாக, அவள் பணியாற்றிய விதமும், பளீரென்ற புன்னகையுடன் பழகிய விதமும் அவனை அவள்பால் ஈர்த்தது…

சற்றே அறியாத்தனமும், அப்பாவித்தனமும் மிகுந்து காணப்பட்ட மேகலாவைத் தனது தேவைக்கேற்றாற் போலவும், தனது குடும்பம், முக்கியமாகத் தனது தாயாருக்கு ஏற்ற மாதிரித் தயார்ப் படுத்த ரொம்பவும் மெனக்கெடணும் என்று அவனது உள்மனது சொன்னாலும் ஆசை யாரை விட்டது?  மேகலாவிடம் தனது விருப்பத்தை அருண் கண்ணியமாகச் சொன்ன போது, மெளனத்தால் தனது சம்மதத்தை உணர்த்திய மேகலாவின் கன்னங்கள், அவனது அந்த எதிர்பாராத கேள்வியால் சற்றே சிவந்தன… நெஞ்சம் படபடத்தது.

தனது அம்மாவிடம் அருண் விஷயத்தைச் சொன்ன போது, அவன் எதிர்பார்த்தபடியே அத்தனை வரவேற்பில்லை.  “தோ பாரு அருண்!  நீ சொல்ற பொண்ணுக்கு உனக்குச் சமமான உயர்படிப்பு இல்ல.  கண்ணுக்கு லட்சணமா இருந்தா மட்டும் போறாது.  சங்கீதம், அந்தஸ்து, இங்கிதம், குடும்பப் பின்னணி என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு.  நம்ப ஸ்திதிக்கு எத்த மாதிரிப் பொண்ணு இருந்தா சொல்லும்படி நம்ப சீனு வத்யாரண்ட சொல்லி வச்சிருக்கேன்.  கொஞ்சம் பொறுமையா இரு” என்றாள் விசாலம்.

அம்மாவின் வார்த்தைகளுக்கு அருண் படிந்தானில்லை…”எனக்குப் பிடிச்சவளோட தான் என்னோட வாழ்க்கை!  உன்னோட வார்த்தைகளை என்னிக்கும் மதிப்பவன் நான்…ஆனால் வார்த்தைகளால் வரும் கட்டுப்பாட்டை மறுக்கிறேன்…” என்று ஒரேயடியாகப் பேசி அவளை அழைத்துக் கொண்டு மேகலாவைப் பெண் பார்க்க வந்தான்.

அருணின் தாயார் விசாலாத்துக்குப் பூர்வீகம் தஞ்சாவூர்ப் பக்கமென்பதால், முறையான சங்கீதம் என்பது அவள் குடும்பத்தோடு ஊறிப் போயிருந்தது.  தனது இரு பெண்களுக்கும் வீணையும் வாய்ப்பாட்டும் சொல்லி வைத்திருந்தாள்.  விசாலத்தின் தந்தை மிருதங்கம் வாசிப்பதில் தேர்ந்தவர் என்பதால், நல்ல வித்வான்களின் அறிமுகமும், சபாக்களின் அங்கீகாரமும் அந்தக் குடும்பத்துக்குப் பல காலமாகவே இருந்து வந்தது…அதனால் விசாலத்தைப் பொறுத்த மட்டில் சங்கீதம் தெரியாதவர்கள் எல்லாம் அற்பப் பிறவிகளாகவே தெரிந்தார்கள்.

மேகலா சற்றே நடுங்கித் தான் போயிருந்தாள்.  மேகலாவின் அம்மாதான் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.  “மேகலா!  எல்லாம் போகப் போகச் சரியாகிடும்.  உன்னோட பொறுமையும் நிதானமும் எதுக்கும் ஈடாகாதுங்கிறதை நாளடைவுல புரிஞ்சுப்பா. குடும்பம் நடத்தறதுக்கு எதுக்குப் பாட்டும் கூத்தும்?  சுவாமி விளக்கேற்றி ரெண்டு சுலோகம் சொன்னாப் போராதா என்ன?  தைரியமா இரு.  இம்மட்டுக்கும் அருண் உங்கிட்ட எத்தனை பிரியமா இருக்கார் பாரு…” என்று சொல்லிப் பொன் வைக்குமிடத்தில் பூவை வைத்துத் திருமணத்தையே முடித்து விட்டாள்.

சங்கீதம் தெரியாதது ஒன்றும் தகுதிக் குறைவு இல்லையே?  ஆனாலும் அருணின் அம்மா விசாலத்துக்கு அது பெரிய மனக்குறையாகவே பட்டது….சங்கீதம் தெரியாதது ஒரு பக்கம் இருந்தாலும், தன் பேச்சை மீறிப் பிள்ளை தனது விருப்பப்படி கல்யாணம் செய்து கொண்டது அவளுக்குத் தாங்க முடியாத வலியாகிப் போனது. வார்த்தைகளில் உஷ்ணமும் உக்கிரமும் கொப்புளித்தன…..எந்தவொரு ரியாக்ஷனும் இதுவரை காட்டாமல் இருந்த மேகலாவின் வாயைக் கிண்டுவதில் ஒரு அல்ப சந்தோஷம் ஏற்பட்டது விசாலத்துக்கு….

“அதெப்படி ஒரு பாட்டுக் கத்துத் தரணும்னு உன் வீட்டில் ஏற்பாடு செய்யல?  நம்மோட குடும்பங்கள்ல பாட்டு என்பது எல்லாச் சடங்கிலும் சம்பிரதாயங்களிலும் கலந்து வருகிறதே! வரலஷ்மி விருதத்தில் அம்மனை அழைக்க ஒரு பாட்டு, ஆரத்திக்கு ஒரு பாட்டு, பூஜைக்கு ஒரு பாட்டு, பஜனைக்கொரு பாட்டு, தாலாட்ட ஒரு பாட்டு, என்று வகைக்கொரு தினுசுல பாட்டு இருக்கே…. . ஹும்! நல்ல குடும்பம்!” என்று ஒரு நாள் அங்கலாய்த்துக் கொண்ட போது ஆற்றாமையால் மேகலாவுக்கு மனசு வலித்தது..

கொஞ்சம் ரோஷமும் பொத்துக்கொண்டு வரவே “எங்க ஊரு கிராமாந்தரம்.  பாட்டு சொல்லித்தர்றவா யாருமில்ல.  பக்கத்து டவுனுக்குத் தான் போயிக் கத்துக்கணும்..அதுக்கு எனக்கு நேரமும் இல்ல..இன்ட்ரஸ்ட்டும் இல்ல.  அது சரி! நீங்க ஏன் அருணுக்குப் பாட்டுச் சொல்லித் தரல?  அவர் சமயங்களில் முணுமுணுத்துப் பாடும்போது நல்ல குரல்ல இருக்கேனு நினைச்சுப்பேன்.”….அவ்வளவு தான்.  மேகலா எதார்த்தமாகக் கேட்கப் போய் அவளை உண்டு இல்லை என்று கிழித்து விட்டாள் விசாலம்.

“ரொம்ப நன்னாருக்கு நீ பேசறது?  புருஷாளுக்கு என்னத்துக்குப் பாட்டு?  பொம்மனாட்டிக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கணும்.  சும்மா புளியைக் கரைச்சு குழம்பும் கறியும் கூட்டும் பண்ணினா மட்டும் போறாது…கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?  உன்கிட்டப் போயி சங்கீதத்தையும், கலாசாரத்தையும் பத்திப் பேசறேனே…நன்னாக் கேட்ட போ, ஒரு கேள்வி?..”

மாமியாரின் கோபம் சூறைக்காற்றைப் போல வார்த்தைகளைச் சிதறடித்தது.  நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், நம்மீது காட்டும் கோபமும் வெறுப்பும் நம்மைப் பாதிப்பது இயல்பு தானே?  சொற்களுக்கு வாசமில்லை; மனமில்லை; எடை இல்லை.  ஆனால் கத்தியை விடவும் கூரான முனைகள் உள்ளதே?  அது யார் மனதையும் ரணப்படுத்திக் குத்திக் கிழித்து விடும்தானே?

ஒவ்வொருவரும் தன்னளவில் வன்முறையைக் காட்டுவதற்கு வார்த்தைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்றே தோன்றியது.  காலம் காலமாக மனித மனமானது, வதைப்பதை ஒரு கலையாகவே பயின்று வந்திருக்கிறதோ?  ஒருவர் மீது காட்டும் கோபமும், வெறுப்பும் உறவின் அழகிய வண்ண ஜாலங்களை,  ஒரு ஓவியமாக உருவாகும் முன்பே அழித்து விடுகின்றதே?  எத்தனை வலிகள்?  பிடிக்காத மனதிற்கு, நாளாவட்டத்தில் சுற்றம், வீடு, சூழல் மனிதர்கள் என்று எதுவும் பிடிக்காதவை ஆகி விடுகின்றதே! இயலாமையும் ஆற்றாமையும் தான் கோபத்தின் ஊற்றுக்காலோ?…

மெளனமாகிப் போனாள் மேகலா.  பேச்சைக் கற்றுக் கொள்ளுவதைப் போல் அத்தனை எளிதாக மெளனத்தைக் கற்றுக்கொள்ள முடியவில்லை….ஆனாலும் பூக்கள் வாசனையால் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போல், சொற்களில்லாமல் மெளனத்தால் தன்னை வெளிக்காட்ட முயன்று வந்தாள்.  எதற்கும் காலம் விடை சொல்லட்டும் என்ற ரீதியில் நாட்களைக் கடத்தினாள்.

அந்த நாளும் வந்தது…அருணின் கம்பெனி விரிவாக்கம் கண்டு அவனோடு அமெரிக்கா போகச் சந்தர்ப்பம் கிடைத்த போது மனது சந்தோஷக் கூத்தாடியது.  ‘விடுதலை, விடுதலை, விடுதலை’ என்று கூச்சலிட வேண்டும் போல் இருந்தது.

அமெரிக்காவின் பிரம்மாண்டமும், சுதந்திரமான அணுகுமுறையும், வெளிப்படையான வாழ்க்கை முறையும் அவளை நிரம்பவே கவர்ந்தன. புத்துனர்ச்சியுடன் புதுரத்தம் பாய்ச்சியது போலிருந்தது.  கடந்த காலத்தின் நிழல் விழாமல் குடும்பத்தைக் கொண்டு செல்ல மிகவும் உறுதியோடு இருந்தாள்.  ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அருமையாகப் பிறந்த பெண் துளசியை அமெரிக்க நாகரீகத்துடனேயே வளர்த்தாள்.  நடை, உடை, பாவனை, நட்பு வட்டம், பேச்சு, உணவுப் பழக்கம் என்று துளசி, இன்றைய அமெரிக்கப் பெண்ணாகவே இருந்தாலும், பாட்டும், பக்தியும் சாத்வீகமான குணமும் அவளிடம் இயல்பிலேயே படிந்து கிடந்தது…

கலிபோர்னியா தமிழ்க்கூடம் என்ற அமைப்பின் பிரசிடெண்டாக அருண் இருந்த படியால், இந்தியா/குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அமெரிக்கா வந்து செல்லும் பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோரிடம் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.  பிரம்மாணடமான அருணின் வீட்டில் அவர்கள் வந்து தங்கியதோடு மட்டுமின்றி, மேகலா செய்யும் வற்றல் குழம்பு, அடை அவியலுக்கும் அடிமையாகிப் போனார்கள்.

இப்படித்தான் துளசியின் சங்கீதமும் விட்டகுறை தொட்ட குறையாக் அங்கே வந்து போகும் வித்வான்கள் மூலம் வளர்ந்தது.  சரளி வரிசை, வர்ணம், என்று ஆரம்பித்து, மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளையும் பாட ஆரம்பித்திருந்தாள் துளசி. பாவூர் கண்ணன் என்ற பிரபலப் பாடகர் துளசிக்கு ஆன்லைனிலேயே பயிற்சி அளித்து வந்தார்.  துளசியின் குரல் தேனாக இனித்தது.  “அருண் ஸார்! மேகலா மேடம்! நம்ப துளசி இங்க இருக்க வேண்டிய பொண்ணே இல்ல.  இந்தியா வந்தால் நிச்சயம் கொடிகட்டிப் பறப்பாள்.  லயமும் ஸ்ருதியும் இழைஞ்சு வருது. அத்தோட அவளது குரலில் க்ளாரிட்டியும், டிக்ஷனும்  பிரமாதம்” என்று சிலாகித்துச் சொன்னார்.

அடுத்த முறை அமெரிக்க விஜயத்தின் போது, அவர்களிடம் இது பற்றிச் சற்றே அழுத்தமாகவே பேசினார்.  “தோ பாருங்கோ அருண்!  பாம்பே ஷண்முகானந்தா சபையிலே ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு நம்ப பிரதமர் வரப்போறார்.  எனக்கு அங்க உள்ளவர்களிடம் நல்ல தொடர்பு இருக்கிறதால நம்ப துளசியை அங்க பாட வச்சா நல்ல ஆரம்பமா இருக்கும்…நல்ல சந்தர்ப்பம்.  தவற விடாம இருக்கிறது உங்க கையில்தான் “ என்ற போது சில்லென்ற ஐஸ்கட்டியை விழுங்கிகினாற் போல இருந்தது மேகலாவுக்கு.

அருணுக்கு உற்சாகம் கரை புரண்டது…”ஓ!  நிச்சயமா.  உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல.. ஷ்யூர்.  எத்தனை பேருக்கு இது போல் சந்தர்ப்பம் கிட்டும்?”

துளசியும் பூரித்துப் போனாள்.  பிரதம மந்திரி முன்பு பாடுவதற்கு எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும்?  மாஸ்டர்ஸ் முடித்து அப்போதுதான் ஒரு பிரபல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த படியால் இரண்டு வாரங்களுக்கு என்று விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்ல ஆயத்தம் செய்தார்கள். தான் கற்றுக் கொண்ட சங்கீதப் பெருமக்களுக்கும், குருவான பாவூர் கண்ணனுக்கும், மற்றுமுள்ள தெரிந்தவர்களுக்கும் என்று சில பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு லாக்கரிலிருந்த வைர, தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டாள் மேகலா.

தனது சித்தி பெண் சியாமளாவைக் கூப்பிட்டு இந்த விஷயத்தைச் சொன்ன போது, “ஓ! ரொம்ப நல்ல விஷயம் மேகலா.  நேரா இங்க வந்துடுங்கோ..நானும் கிருஷ்ணனும் வேணுங்கிற உதவி பண்ணத் தயாரா இருக்கோம்.  “பெரீமா/பெரீப்பா’னு நாங்க அமெரிக்கா வந்த போது எங்க கிட்ட அத்தனை ஒட்டுதலா இருந்தா துளசிக்குட்டி, இப்போ பிரதமர் முன்னால கச்சேரி பண்ற அளவுக்கு வந்தாச்சா?  கிரேட்..” என்று உற்சாகமாகப் பேசினாள்.  கிருஷ்ணன் அடிக்கடி அமெரிக்கா வந்து செல்பவர்.  எனவே அவர்களுக்குள் நிரம்பவே அன்னியோன்னியம் இருந்தது.

பாம்பே ஷண்முகானந்தா ஹாலில் எள்ளுப் போட்டால் எண்ணை வழியும் என்பது  போல் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அதுவும் இம்முறை பிரதமர் வந்திருந்தபடியால். கூடுதல் அலங்காரமும், மலர் மேடைகளும், அழகான இருக்கைகளும் ஒருவித சோபிதத்தைக் கொடுத்திருந்தன.  மயில்கழுத்து நிறப் பட்டுப்புடவையும், வைர நெக்லசும், குடை ஜிமிக்கியுமாக இருந்த துளசி அனைவர் கண்களுக்கும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிந்தாள். வரவேற்புரைக்குப் பின்னர் பிரதமரின் உரை முடிந்ததும், துளசி பாட ஆரம்பித்தாள்.

சம்பிரதாயப் பாடல்களும், மீரா பஜனும் பாடிய போது அவையில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!  அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே..இதை வந்தனை கூறி மனதிலிருத்தி வாழ்த்தி வணங்கேனோ?…இதை வந்தே மாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?” என்று பாரதியின் பாடலைப் பாடி நிறுத்திய போது சபையோர் அனைவரும், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீரில்  நனைந்திருந்தனர்.   கைதட்டல் அடங்கவே வெகுநேரமானது.

துளசியைத் தட்டிக் கொடுத்து, சால்வை போர்த்தி, உயர்ந்த பதக்கமொன்றை அணிவித்துப் பிரதமர் பேசலானார்.  “துளசி என்பது, நமது பாரதத்தின் பாரம்பரிய, புனிதமான,வணங்கத் தகுந்த ஒரு செடி. துளசியின் ஒவ்வொரு இலையும் நறுமணம் எண்பது போல், இந்தப் பெண் துளசியின் பாடலும், இவ்விடத்தில் நம்மிடையே பக்தி மணத்தையும், நாட்டுப் பற்றையும் ஒருமித்து உண்டாக்கியது!  முதல் இலையிலிருந்து, இறுதி இலை வரையில் மாறாத மணம் கொண்ட துளசி வேறு, இந்தப் பெண் வேற அல்ல என்று என்பதை நான் கண்கூடாக உணர்கிறேன்.  துளசி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், தனது வேர்கள் பாரதத்தில் ஊன்றப்பட்டதை உணர்ந்த பெண் என்பதை அருமையாகப் பாடிக் காட்டி விட்டார்.  இவரைப் போன்ற இளைஞர்கள் உள்ளவரை நமது தேசம் எல்லாவற்றிலும் மென்மேலும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.  துளசி, அனைத்திலும் சிறந்து விளங்கிப் புகழ்மணம் பரப்ப வாழ்த்துகிறேன்..வாழ்க பாரதம்!”…

பாராட்டு மழையில் அருணும் மேகலாவும் நனைந்து போயிருந்தனர்.  எங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம்.  சியாமளாவும் கிருஷ்ணனும் மனதாரப் பாராட்டினர்.  “துளசி ஈஸ் எ ப்லெஸ்டு கேர்ல்” என்று அவளைக் கட்டிக் கொண்டனர்.  மேகலாவுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன….தன்னால் முடியாத ஒன்றைத் தனது பெண் சாதித்துக் காட்டியபோது மனது விம்மியது…துளசியை எண்ணிப் பெருமையாக இருந்தது…..இந்தப் பெண்ணுக்குள் இத்தனை திறமையா? என்று வியந்து கொண்டிருந்தாள்.

சியாமளாவிடமும், கிருஷ்ணனிடமும் அவர்கள் விடைபெற்று, முன்பே புக் செய்து வைத்திருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார்கள்.  மறுநாள் இரவு அவர்களது அமெரிக்கப் பயணம் என்பதால் ஏர்போர்ட்டுக்கு அருகில் இருந்த அந்தப் பிரபலமான ஹோட்டலுக்கு விரைந்தனர். அவர்களுக்கு அது சமயம் ஒரு ஆனந்தமான அமைதி தேவையாக இருந்ததும் ஒரு காரணம்.

மறுநாள் காலை உணவுக்கு அவர்கள் கிளம்பும் சமயம், அவர்களைப் பார்க்க ரிசப்ஷனில் யாரோ காத்திருப்பதாக ரூம்பாய் வந்து கூறினான்.  சியாமளாவாக இருக்கும் என்று போனவர்கள், அங்கு முன்பின் அறியாத மூன்று பேர் இருப்பதைக் கண்ணுற்றதும்…கொஞ்சம் குழம்பினர்.  “ஹலோ அங்கிள்!  ஐம் தீபக்!  மீட் மை பேரண்ட்ஸ்…” அந்தப் பையன் தீபக் பார்ப்பதற்கு கண்ணியமாகவும், லட்சணமாகவும் தெரிந்தான்.

“யெஸ் ப்ளீஸ்…குட்மார்னிங்” என்று அருணும் கை குலுக்கினான்.  அந்தப்பையனின் அப்பா, உயர்ந்த ஸுட், டை கட்டி அந்தக் காலத்து தர்மேந்திரா போல் கம்பீரமாகத் தெரிந்தார்.  அவன் அம்மாவும், மைசூர்சில்க் புடவையில் வைரப் பதக்கம் பதித்த நாலுவடச்சங்கிலியும், ரோலக்ஸ் வாட்சுமாக ஜம்மென்று இருந்தாள்.

“ஸாரி டு டிஸ்டர்ப் யூ இன் த மார்னிங்…நேத்திக்கு உங்க பொண்ணோட பாட்டு எங்கள அப்படியே கட்டிப் போட்டு விட்டது.  எங்களை விடவும், தீபக்கிற்கு ரொம்பப் பிடிச்சுப் போய்விட்டது…பாட்டு மட்டுமில்ல…பாடின பொண்ணையும்” என்று கண் சிமிட்டிக் கொண்டே சொன்னபோது அருணும், மேகலாவும் நிஜமாலுமே விழித்தார்கள்.

அவர்களை அதிகம் குழப்ப விரும்பாதவராய் அவரே பேசலானார்…”நாங்கள் தஞ்சாவூர் பக்கம்.  ஆனா, பாம்பே பக்கம் வந்து ரொம்ப காலம் ஆச்சு…அப்பப்ப குலதெய்வம் கோவிலுக்குப் போய் வருவதோட சரி…ஆனாலும் பாருங்கோ,,,நாம எங்கே குடி பேர்ந்து போனாலும் கூடவே நம்மோட ஊரும் ஒரு கைப்பிடி அளவு தங்கிடும் என்பார்கள்…பேச்சிலோ, உணவிலோ, செய்கையிலோ, எதிலாவது அந்ததந்த ஊரின் ஜாடைகள் தெரிந்து விடும்,   நீங்களும் தஞ்சாவுராகத் தானிருக்க வேண்டும்.  துளசியின் பாடலிலும், பணிவிலும் தஞ்சாவூரின் பாணி தெரிகிறது…எங்கள் அனைவருக்கும் பாட்டு பிடித்திருப்பதாலும், எங்கள் பிள்ளை தீபக்கிற்குத் துளசியைப் பிடித்திருப்பதாலும், இந்தப் பேச்சை ஆரம்பித்தேன்.  தவறாக எண்ணாதீர்கள்.  உங்களுக்குத் துளசிக்காக வேறு ஏதும் திட்டமிருந்தால், வற்புறுத்தப் போவதில்லை…நாம் நண்பர்களாகப் பிரிந்து விடுவோம்” என்றார்.

இதென்ன விசித்திரமாக இருக்கிறது?  கைவசமாவது ஒவ்வொருவரின் விருப்பத்தையும், முயற்சியையும் ஒட்டியே என்பது போல, வாழ்க்கை ஒரு பாதரச உருண்டை போல நமது கையில் அகப்படாமல் மிகவும் வசீகரமாக அல்லவா கண்முன்னே உருண்டோடிக் கொண்டிருக்கிறது?  வாழ்வின் கரங்கள் துளசிக்கு இப்போது உயர்வைத் தரக் காத்துக் கொண்டிருக்கிறதா?  எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்பது இயற்கையின் பெரும் கொடையாகிய மழைக்கு மட்டுமில்லை, வாழ்வின் அரிதான கணங்களுக்கும் பொருந்துகிறதே!

எதுவொன்றும் கொஞ்சமும் எதிர்பாராமல் நடப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.,  எந்த ஊரின் நிழல் கூடப் படியக்கூடாது என்றிருந்தேனோ, அங்கேயே துளசி வேரூன்றப் போகிறாளா?  மேகலாவுக்குப் படபடத்தது. வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்று இருப்பதுதான் அதன் சுவாரஸ்யம் போலும்!

அருண் சற்று டயம் வேண்டும் என்று கேட்டு விடை பெற்றுக் கொண்டான்.  சியாமளாவிடம் இது விஷயத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவள் அக்குடும்பத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து சொன்னாள்.  மிக நல்ல குடும்பமென்றும், ஆசாரமானதென்றும், விருந்தோம்பலும், பாட்டும் கச்சேரியும் அடிக்கடி நடைபெறும் வீடு என்றும், பூஜையும் சத்சங்கமும் அடிக்கடி அங்கே நடைபெறுவதுண்டு என்றும் சொல்லி நிறுத்தியபோது, வந்த சம்பந்தத்தை விட்டுவிடக்கூடாது என்று அருணும், மேகலாவும் நல்ல நாளில் பேச்சைத் தொடங்கித் துளசியின் கல்யாணமும் செய்தாயிற்று…..

கண்மூடித் திறப்பதற்குள், இப்படித் துளசியின் திருமணம் நடந்துவிடும் என்று கனவிலும் எண்ணவில்லை!  இசையைத் தவிர, எல்லாவற்றிலும் ரொம்பவே அமெரிக்கத்தனமாக இருக்கும் துளசி எவ்வாறு பாரத மண்ணோடு ஒத்துப் போக முடியும்?  பிரபலங்கள் வந்து போகும் வீட்டை இந்தப் பெண் எப்படிச் சமாளிக்கும்?  பாஸ்தாவும், பீட்சாவும் சாப்பிட்டு, ஜீன்ஸும் டாப்சுமாக வளையவந்த பெண்ணைச் சரியான இடத்தில் தான் கொடுத்திருக்கோமா? சமயங்களில் வேதனை மிஞ்சி அருணிடம் அங்கலாய்த்துப் போவாள்….

ட்ரிங்..ட்ரிங்….காலிங் பெல் சத்தம்.  கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டவள், எல்லோரையும் வரவேற்கத் தயாரானாள்.  அனைவரும் வந்துவிட்டார்கள், பிரியாவைத் தவிர. அரட்டையும், சிரிப்புமாக அந்த இடம் கலகலத்தது.  அரசியல், சினிமா, அன்றாட நிகழ்வுகள், ட்ரம்பின் மேடைப் பேச்சுக்கள், மோடியின் சீர்திருத்தச் சட்டங்கள், சித்ஸ்ரீராமின் பாடல்கள்  என்று ஒரு சுற்று வந்தார்கள்.  காயத்ரி ஆரம்பித்து வைத்தாள்…”என்ன மேகலா…எப்படி இருக்கா உன் பொண்ணு?  டம்முடம்முனு பூமி அதிர நடந்து போவாளே…ஹவ் ஈஸ் ஷீ?”

“ரொம்ப நன்னாவே இருக்கா துளசி”…

“பெரிய குடும்பம்னு கேள்விப்பட்டோமே….பிரச்னையெல்லாம் சமாளிக்க முடியறதா?”..இது கல்யாணி.  மேற்கொண்டு தொடர்ந்தாள்.  “இன்னிக்கு ஏன் ப்ரியா வரலைன்னு தெரியுமோ? பொண்ணு விரும்பின படியே கல்யாணம் பண்ணி வச்சா…ஆனாக்க பொண்ணுக்குச் சமைக்கத் தெரியல; இங்கிதமாப் பழகத் தெரியல…கால் மேல கால் போட்டுண்டு சதா டீவியும் சீரியலுமாப் பொழுதைப் போக்கிறதுன்னு ஒரே கம்ப்ளேயிண்டாம்.  அந்தப் பொண்ணுக்கு இந்தச் சூழலும், வீட்டின் வழக்கங்களும் ஒத்துப் போகாமல் டிவோர்ஸ் வரைக்கும் வந்தாச்சு,,,அதான் ப்ரியா மனசு உடஞ்சு போயி எங்கயும் வர்றதில்ல”…

மேகலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது இந்த விஷயம்…என்ன பெண்கள்?  பிறரது வேதனையை அம்பலமாக்கி அதில் குளிர் காய்கிறார்களே?  அவர்களெல்லாம் எப்போது கிளம்புவார்கள் என்று காத்துக் கிடந்தாள்.  அவர்களெல்லாம் சென்ற பிறகு அருண் வந்தபோது ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தாள்.

“மேகலா…உலகம் அப்படித்தான் பேசும்…எதிர்பார்க்கும்.  ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே?  டேக் இட் ஈஸி!  நம்ப பொண்ணு கெட்டிக்காரப் பொண்ணு….அனாவச்யமாக் கற்பனை பண்ணிண்டு உடம்பையும் மனசையும் கெடுத்துக்காதே”….அருண் துளசியிடம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பீடும் அத்தனை உசத்தியாக இருந்தது….

ஆனாலும் மனது நிலை கொள்ளாமல் சியாமளாவுக்குப் போன் செய்தாள்.  ஒரு நடை துளசியைப் போய்ப் பார்த்து வரும்படி சொன்னபோது, மேகலாவின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட சியாமளா, அந்த வார இறுதியில் போய்ப் பார்த்து வருவதாகச் சொன்னாள்.

சொன்னபடி சியாமளாவிடமிருந்து அந்த சனிக்கிழமையன்று போன்.  “மேகலா…உனது பெண் படு சமர்த்து…இரண்டு நாட்களுக்கு முன்னால் அங்கு பெரிய விருந்துபசாரம் நடந்திருக்கு.  நம்ப துளசி தான் முன்னின்று, எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, நிறைவாக எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.  எல்லாவற்றையும் திட்டமிட்டு அழகுறச் செய்வதாக அவளது மாமனாரும் மாமியாரும் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.  வெறும் விருந்துபசாரமாக மட்டுமில்லாமல், அந்த ஏரியாவின் ஏழைக் குடும்பங்கள் நன்மை அடையும்படியான வகையில் அவர்களுக்கு ஏற்றபடி சில வேலைகளை உண்டாக்கி, தினமும் அவர்களுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்து..என்று ஏகப்பட்ட திட்டங்கள் இருக்காம்….பாடல், சிலம்பம், வில்வித்தை, நூலகம் என்று இன்னமும் நிறைய….சரியான இடத்தில் இருக்கா துளசி என்று பெருமைப்பட்டுக்கோ”

…..அப்புறம்…நான் போயிருந்த சமயம் சமையற்கட்டில் வெள்ளிக்கிண்ணத்தில் சோறிட்டு, அளவான உப்பிட்டு, பாலும், வெண்ணையும், கெட்டித் தயிரும் விட்டுப் பிசைந்த தயிர் சாதத்தைத் தீபக்கிற்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள்…முத்துமுத்தான வியர்வையும், சற்றே கசிந்த கண்மையுமாக, மையலும் மயக்கமுமாக அவன் ஆனந்தமாக ரசித்து உண்பதைப் பார்த்துக் கொண்டு அவள் பரிமாறியது எத்தனை அழகோவியமாக இருந்தது தெரியுமா? கசங்கிய உடையும், கலைந்த கேசமும், கரைந்த கண்மையும் அவளுக்கு அத்தனை சோபையைக் கூட்டி இருந்தன.  காதலும், கரிசனமும் அந்தத் தோற்றத்தில் நான் கண்டேன்…” என்ற போது மேகலாவின் மனபாரம் நீங்கினாற் போலிருந்தது..

டங்கென்ற சப்தத்தோடு, வாட்ஸ்அப் தகவல் வந்திருந்தது…துளசிதான் அனுப்பியிருந்தாள். நீண்ட தகவலாக இருக்கவே அமர்ந்து படிக்கலானாள்.

“அம்மா!  இப்போதான் சியாமளா பெரீமா வந்தா..நீ என் இத்தனை கவலைப்படறே?  நான் உன்னோட பொண்…உன்னோட வளர்ப்பு இல்லையா?  எங்கிருந்து தப்பும் தவறும் வரும்?

தீபக்கிற்கு என்னைத் திருமணம் செய்து வைத்ததற்கு உனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப தாங்க்ஸ்…என்னுடைய பார்வையும், உலகமும் இப்போ மிகவும் விரிந்து இருக்கு…கொலம்பஸ் கண்டுபுடிச்ச எந்தவொரு சரித்திரமும் இல்லாத புதியகண்டம் அமெரிக்காலேருந்து வந்து, பழைய சரித்திரங்களும், வரலாறுகளும், நிறைந்த புராதன இந்தியாவைப் பார்க்கையில், நான் அறிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருப்பது தெரிகிறது.  எனது வீட்டார் பூரண சுதந்திரம் தந்திருப்பதால் எதையும் பயமின்றி, அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது..

நானும் புதிது…இங்குள்ள மனிதர்களும் புதிது..இடமும் புதிது…எல்லாமே புதியது என்பதால், எனக்கு ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருக்கு, எல்லாம் அனுபவம் கற்றுத்தரும் பாடமல்லவா?  அப்பா மாதிரி எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்வதால் மனதில் கவலைகள் கூடு கட்டுவதில்லை…

அம்மா…அங்கீகாரம் என்பது ஒரு ஆளுயர மாலையோ, மலர்க் கிரீடமோ அல்ல.  ஒரு புன்சிரிப்பு, ஒரு இதமான வார்த்தை, வாஞ்சையுடன் கூடிய தோள்தட்டல், அழகான கைகுலுக்கல்..இப்படி இருந்தாலே போதும்.  இவை எனக்கு அன்றாடம் வேண்டிய மட்டும் கிடைக்கின்றன.  நாம் செய்பவை தாமே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாக்குகிறது?  வயதாவதால் மட்டும் நமது வாழ்வின் துவக்கமும் முடிவும் ஏற்படுவதில்லை…நாம் கடந்து செல்லும் அனுபவங்களை விடச் சிறந்த ஆசான் எதுவாக இருக்க முடியும்?

ஒரு அன்னை தெரசாவும், விவேகானந்தரும், போற்றுதலுக்குரிய வல்லுனர்களும், இங்கிருந்து வந்தவர்கள் தானே? அவர்களுக்கே எத்தனை தடைகள்? அபவாதம்? முட்டுக்கட்டைகள்?  அவர்களின் சரித்திரம் அவற்றை எல்லாம் தாண்டியது அல்லவா?  அம்மா, …உனது இளவயதுத் துயரங்களை நான் அறிவேன்…. .உன் உள்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.  அதனாலேயே உனது கேள்விகள், பதிலை நோக்கியதாக அன்றிப் பயத்தை உருவாக்குவதாகவே உள்ளன…நீ பட்ட அடியும் அவமானமும் என்மீது விழக்கூடாது என்று எத்தனை கவனமாக என்னை வளர்த்திருக்கிறாய்?

அம்மா….ஒரு பெண் வார்த்தைகளின்றிப் பேசுவதும், காற்றே இல்லாமல் சுவாசிப்பதும், கண்களில்லாமல் காண்பதுவும், கவலைகள் இல்லாமல் தூங்குவதும் ஒரு தாயின் கருவறையில் இருக்கும்போது மட்டுமே சாத்தியம்.  வெளியில் பயணப்படும்போதும், உறவுகளோடு இருக்கும் போதும், பொது இடத்தில் நடந்து கொள்ளும்போதும் அவள் பயின்ற அறமும், திறமும் சொல்லித்தந்த பாடங்களும் துணையாக இருக்குமே..அத்தோடு உனது வளர்ப்பு எனும் கவசமும் நிழல் போல் அல்லவா காத்து நிற்கிறது?

பட்டங்கள் எல்லாம் ஒரே ஆகாயத்தில் பறந்தாலும், ஒவ்வொன்றும் தனித்தனி விசையும் உயரமும் கொண்டல்லவா பறக்கிறது?  நானும் இங்கே உயரே உயரே பறக்கிறேன் அம்மா…துளசி என்று பேரிட்டு   மிகவும் பவித்ரமாக, பத்திரமாக என்னை இந்தப் புண்ணிய பூமியில் விதைத்திருக்கிறாய் ! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி,  முந்தையர் சிந்தை சிறந்து வளர்ந்த நாட்டில் அல்லவா நான் வாழுகிறேன்?  விதைகள் என்றுமே முளைப்பதற்குத் தான் அம்மா…யாரும் உண்டு ஜீரணிப்பதற்கு அல்ல.  துளசியின் புனிதம் கெடாமல், அதன் புகழ் மங்காமல், காய்ந்தாலும் மணக்கும்படியாக வாழ்வேன் அம்மா…கவலைப்படாதே!”

கண்களில் ஆனந்தக்கண்ணீர் முட்ட, டேபிளில் இருந்த துளசியின் புகைப்படத்தை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள் மேகலா!