காதல் என்றால்..
************************************
காதல் என்பது கண்ணில் தெரிவது
ஆதாம் ஏவாள் சொல்லித் தந்தது
அதரத் தேனில் அன்பைச் சொரிவது
இதயம் புகுந்து இன்பம் தருவது!
காதல் என்பது இயற்கை யானது
சாதியும் இனமும் மொழியும் கடந்தது
ஆதியோ டந்தமாய் அகத்தில் இணைவது
சுதியொடு லயமாய் இசையென் றாவது!
காதல் என்பது யுத்தம் போன்றது
மோதல் வரினும் முத்தம் கொள்வது
சதையொடு நகமாய்ச் சார்ந்தே இருப்பது
கதைக்குள் கதையெனக் காவியம் படைப்பது!
காதல் என்பது மயக்கம் தருவது
போதை ஏற்றும் மதுவைப் போன்றது
மாதா பிதாவை மறக்கச் செய்வது
வேதம் சொல்லும் முனியைக் கவர்வது!
காதல் என்பது கதகதப் பானது
கூதல் வந்தால் கம்பளி ஆவது
புதிராய்த் தெரிவது புதையல் போன்றது
எதிர்துரு வங்களை இணைக்க வல்லது!
காதல் என்பது உணர்ச்சிகள் நிறைந்தது
வதைத்து எடுப்பது வலியைக் கொடுப்பது
சிதையின் நெருப்பாய்ப் பனியிலும் தகிப்பது
விதைக்குள் விருட்சமாய் அன்பினை வளர்ப்பது!
காதல் என்பது புயலாய் வருவது
ஊதல் காற்றென உறவினை உடைப்பது
யாதும் ஊரெனச் சுற்றியே திரிவது
ஏதும் துணிவுடன் செய்திட வைப்பது!
காதல் என்பது முழுமை அடைவது
முதிர்ந்த காதல் முத்திரை பதிப்பது!
‘ காதல் போயின் சாதல் ‘ அதனால்
காதல் புரிவீர்! கவிமணம் படைப்பீர்!
************
பானுரவி