வான் புகழும் வள்ளுவர்

வான் புகழும் வள்ளுவர்

 வான் புகழும் வள்ளுவர்

 ************************************

வியாசனின் பாரத்தை வியந்துநான் படித்ததில்லை!
ஆய்ந்தநல் இராமன்காதை கம்பனைப் பயின்றதில்லை!
ஐம்பெருங் காப்பியங்கள் யாதொன்றும் அறிந்தேனில்லை !
அம்புவி கடந்துவாழும் வள்ளுவன் குறள்கண்டேனே!

அகரமே சிகரமாதி பகவனே உலகமென்றான்!
அகநக நட்பைப்போற்றி அழுக்காறு இழுக்குஎன்றான்!
அகழ்ந்திடும் நிலத்தைப்போல இகழ்வாரைப் பொறுக்கச்சொன்னான்!
தகவிலார் தக்காரெல்லாம் எச்சத்தால் புரியுமென்றான்!

நாவினைக் காக்கச்சொன்னான்!
நன்றியோ டிருக்கசொன்னான்!
சோர்விலாள் பெண்ணேயென்றான்!
சுற்றத்தால் பழமையென்றான்!
வாய்மையே வாழ்வுஎன்றான்!

வாக்கினில் இனிமையென்றான்!
தெய்வத்தால் முடியாதாயின் முயற்சியில் வெற்றியென்றான்!
எண்ணோடு எழுத்தைச்சேர்ப்பான்!
இரண்டுமே கண்களென்பான்!

அன்பிற்குத் தாழ்ஏன்?என்பான்!
அந்தணர் அறவோரென்பான்!
உழுவாரை உயர்த்திவைப்பான்!
ஒழுக்கமே விழுப்பமென்பான்!
குழலிசை புறத்தேதள்ளி மழலைச்சொல் இனிதுஎன்பான்!

அருட்செல்வம் பெரிதுஎன்பான்!
அளவறிந்து வாழச்சொன்னான்!
வறியார்க்கு ஈதலொன்றே வளம்தரும் ஈகையென்பான்!
அறிவாளர் திருவைப்போற்றி பொருளுடையார்க் குலகமென்பான்!
பெரியாரைத் துணைகொள்வோர்க்குத் துன்பங்கள் ஏது?என்பான்!

உறக்கமே மரணமென்பான்!
பின்விழித்தலைப் பிறப்புஎன்பான்!
பொருந்தியே உலகில்வாழப் பொதுமறை ஆக்கிவைத்தான்!
நறுக்கென்று ஈற்றடியில் நன்றாகச் சிந்தையுள்ளே

இருட்டினை விரட்டவல்ல திருக்குறள் வெளிச்சமீந்தான்!
கடுகினைத் துளைத்துஎழு கடலினைப் புகுத்தினாற்போல்

அடுக்கியே அதிகாரத்துள் அறம்பொருள் இன்பம்வைத்தான்!
வான்புகழ் வள்ளுவன்சொல் வற்றாத செல்வமன்றோ?

 நான்மறைக் கிணையாம்நல்ல குறள்வழி உயர்ந்துவாழ்வோம்!

 ************

பானுரவி (S2597644D)