நாடு காக்கும் நாயகர்கள்
*****************************
ஆரணங்கு சீதையின் அழகிலே மதிகெட்டு
அபகரித்த லங்கா திபன் இராவணன் என்பானை
அம்பினால் வீழ்த்திய இராமபிரான் ஓர் நாயகன்!
ஆராய்ச்சி மணிகேட்டு அக்கணமே தன்மகனைத்
தேர்க்காலில் இட்டுக் கொன்று நேர்மையாய்
நீதியை நிலைநாட்டிப் புகழ்பெற்ற மனுநீதி ஓர் நாயகன்!
அருநெல்லிக் கனியினை ஒளவைக்கு அளித்திட்ட
அதியமான் ஓர் நாயகன்!
புறாவொன்றைக் காத்திடத் தன்னையே தந்திட்டச்
சிபிமன்னன் ஓர் நாயகன்!
தருமத்தின் தலைவனாய் செஞ்சோற்றுக் கடன்தீர்த்த
கர்ணனும் ஓர் நாயகன்!
போர்வென்று பெருவுடையார் கோவிலால் புகழ்கொண்ட
சோழனும் ஓர் நாயகன்!
கூட்டிலே முட்டையை அடைகாக்கும் போதிலே
குஞ்சாகிப் பறந்து வருமே!
பூட்டியே வைப்பினும் பூக்களின் வாசனை
புவியெங்கும் பரவி வருமே!
பாட்டுடைத் தலைவனைப் போற்றிடும் புலவனின்
ஏட்டிலே தமிழ் மணக்குமே!
நாட்டையே நயம்பட நாயகர் ஆள்வரேல்
நன்மைகள் தேடி வருமே!
ஒருகுடைக்கீழ் அரசாண்ட சேரரும் சோழரும்
பாண்டிய மன்னர் பலரும்
குறுநில மன்னரும் பல்லவ மன்னரும்
சிறப்பாட்சி புரிந்த நாளில்
உருவான நாயகர்கள் ஒன்றல்ல பலநூறு
எந்த நாயகரைச் சொல்லுவேன்?
சீராக நல்லாட்சி புரிந்திட்ட நாயகரை
வரலாறு காட்டி விடுமே!
எத்தனை நாடுகள்? எத்தனை அரசாங்கம்?
எத்தனை தாம் நாயகர்கள்?
அத்தனை பேரிலும் சரித்திரம் படைத்திட்ட
முத்தான சிலரும் உண்டு!
இத்தனை காலமாய்ச் சிங்கையில் வாழ்வதால்
சத்தியம் செய்து சொல்வேன்!
பத்தரை மாற்றுத் தங்கம்நம் நாயகன்
லீக்வான்யூ என்று சொல்வேன்!
******* பானுரவி